Wednesday, April 6, 2011

சந்திரசேகரருக்கு நெருக்கடி கொடுக்கும் ஜெயசீலன்



சென்னை: இயக்குநர் சந்திரசேகரனால் நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாநிலத் தலைவர் சி ஜெயசீலன், தனது ஆதரவை திமுக கூட்டணிக்கே வழங்குவதாகவும், அக்கூட்டணி வெற்றிக்குப் பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் 'மக்கள் இயக்கம்' என்ற பெயரில் தனி இயக்கம் ஆரம்பித்துள்ளார். இதன் நிறுவனத் தலைவராக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளார். 'இந்த இயக்கம்தான் நாளை விஜய்யின் அரசியல் கட்சியாக மாறும். அந்த மாற்றம் ரசிகர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது' என்று முன்பு விஜய்யே அறிவித்தது நினைவிருக்கலாம். 

இதன் பிறகுதான் ஆளும் கட்சி தரப்பிலிருந்து விஜய்க்கு நெருக்கடிகள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதை விஜய்யே பேட்டிகளில் பகிரங்கமாகக் கூறினார். 

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் சட்டப்படி 
குற்றம்  படத்தை தயாரித்து இயக்கினார். இப்படத்திற்கும் ஆளும் தரப்பினரால் எதிர்ப்புகள் வந்ததாக சந்திரசேகர் கூறினார்.

இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மூன்று முறை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, 'விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறது. நானும், விஜய் ரசிகர்களும் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்', என்று அறிவித்தார் எஸ்ஏசி.

எஸ்.ஏ.சந்திரசேகரனின் இந்த முடிவை எதிர்த்த விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலன், மன்றத்திலிருந்தபடியே திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மன்றத்தின் இதர நிர்வாகிகளையும் திமுக பக்கம் வருமாறு அவர் தூண்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஜெயசீலன் அதை மறுத்து வந்தார். 'எங்கள் தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் செய்வோம்' என்று கூறிவந்தார்.

இந்நிலையில், அவரை மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக நேற்று அறிவித்தார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன். அவருடன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் 
ஸ்டாலின் பிரபுவும் நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான கையோடு, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் வந்தார் ஜெயசீலன். அங்கே திமுக தலைவர் 
கருணாநிதி இல்லாததால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்கள், "அதிமுகவை ஆதரிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகிவிட்டேன்.

விரைவில் கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைவேன். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். கலைஞர் உத்தரவுக்காக காத்திருக்கிறேன். அவர் உத்தரவு வந்தது பிரச்சார களத்தில் குதிப்பேன்," என்றார். 

உங்களை ஏற்கெனவே நீக்கிவிட்டதாக இயக்குநர் எஸ்ஏசி அறிவித்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்டபோது, "நானாகவே விலகிவிட்டேன். அவரது அறிவிப்பு பற்றி எனக்குத் தெரியாது", என்றார் ஒரேயடியாக.
மதுபானை லைசென்ஸ் கேட்டாரா எஸ்ஏசி?

மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தனக்கு மதுபான ஆலை வைக்க லைசென்ஸ் தரும்படி கேட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தேர்தலில் நிற்க சீட் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் கேட்டது இந்த லைசென்சைதானாம். ஜெயலலிதாவுக்கே போட்டியாக மதுபான ஆலை வைக்க லைசென்ஸ் கேட்டால் எப்படித் தருவார்கள்?" என்று பக்கா அரசியல்வாதி ரேஞ்சுக்குப் பேசினார் ஜெயசீலன்.

0 comments:

Post a Comment