Saturday, May 14, 2011

தமிழ் திரையுலகம் : தேர்தல் விளைவுகள்

நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியதும் மக்களுக்கு ஆட்சி மாற்றம் நடக்கப் போவது தெரிந்ததோ இல்லையோ தமிழ் திரையுலகில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது.  தமிழ் திரையுலகை சேர்ந்த சில முக்கிய பிரபலங்களின் முக்கியமான மாற்றத்தை காணலாம்.

வடிவேலு :

தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்காந்தை கடுமையாக சாடினார். இவர் பிரச்சாரம் செய்த தி.மு.கவிற்கு இந்த தேர்தல் முடிவுப்படி எதிர்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்கவில்லை. நேற்று காலை முதலே இவர் அலுவலகத்திற்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆனால் தே.மு.தி.க தொண்டர்கள் இவர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து கடும் கூச்சல் இட்டனர். அப்போது வடிவேலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கோஷங்களை கட்சியினர் எழுப்பினர். வீடு மற்றும் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

ஆனாலும் விடாமல் அவ்வப்போது அங்கு வந்து தே.மு.தி.க.வினர் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இந்த பாதுகாப்பு மேலும் சில நாட்கள் தொடரும் என்று தெரிகிறது.

விஜய் :

அ.தி.மு.கவிற்கு ஆதரவு என்றாலும் தேர்தல் பிரச்சார சமயத்தில் அமைதியாக இருந்தார். ஆனால் இவரது அப்பா எஸ்.ஏ.சி விஜய் நற்பணி இயக்கம் அ.தி.மு.கவிற்கு ஆதரவு அளிக்கும் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முதல் ஆளாக தமிழ் திரையுலகில் இருந்து ஜெயலலிதா சந்தித்தவர் விஜய் தான். அவர் சந்தித்து முடித்து வெளியே வந்தவுடன் பத்திரிக்கையாளர்களிடம் "ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.


ரஜினி :

இந்த தேர்தலில் கட்சி தொடங்குவார் அடுத்த தேர்தலில் கட்சி தொடங்குவார் என்று ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளுடன் இருப்பவர்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால் இந்த தேர்தலிலும்  ஒட்டு மட்டும்  போட்டு விட்டு, தன் ஜனநாயகக் கடமையை முடித்துக் கொண்டார் ரஜினி.  ஓட்டளித்த பின்னர் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் " கடுமையாக விலைவாசி உயர்ந்து இருக்கிறது. ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஊழல் பெருகி விட்டது" என்று பேட்டியளித்து தி.மு.கவை மறைமுகமாக கடுமையாக சாடினார். இருந்தாலும் அன்று மாலை கருணாநிதியுடம் உட்கார்ந்து 'பொன்னர் சங்கர்' படம் பார்த்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பரபரப்பான சமயத்தில் ரஜினி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. எனினும்
நேற்று முடிவுகள் வெளியான சமயத்தில் இவரது உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது "ரஜினி நலமாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். ஜெயலலிதாவுக்கு இதன் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

ரஜினியின்  இரண்டு மகள்களும் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன்:

தி.மு.க. ஆட்சியில் இவர் தான் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராய் இருப்பார்..  சினிமா சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தவர்,   கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சிக்கும்  இவர் பங்கேற்கவில்லை  நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன படம் சார் தயாரிக்க போறீங்க? ( கதை வசனம் யாரு சார்..? )

பெப்சி தலைவர்(இருந்தவர்) வி.சி.குகநாதன் :

தி.மு.க ஆட்சியில் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்து தனது சங்கத்திற்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தவர். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அப்பேட்டியில் அவர் கூறியது

"திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.

என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன்.'' என்று கூறியுள்ளார்.

குஷ்பு:

தி.மு.கவில் தன்னை இணைத்து கொண்டவர் இந்த தேர்தலில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பெரும் ஏமாற்றம் தான் பரிசாக கிடைத்தது. இருந்தாலும் மனம் தளராமல் பிரச்சாரம் செய்தார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் "இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்." என்று தெரிவித்தார்.


திரையுலக வேட்பாளர்கள் : 


தி.மு.க அனுதாபிகள் பலர் அச்சத்தில் இருந்தாலும் அவர்களால் தூக்கி ஏறியப்பட்டவர்கள் நேற்று கடும் உற்சாகத்தில் இருந்தார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெரும் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

இந்த தேர்தலில் பல திரையுலக பிரபலங்கள் பிரச்சாரம் செய்தாலும் தேர்தலில் போட்டியிட்ட திரையுலக பிரபலங்களில் மன்சூரலிகானை தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனர். விஜயகாந்த் (ரிஷிவந்தியம்) சரத்குமார் (தென்காசி) அருண்பாண்டியன் (பேராவூரணி) தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்) பழ.கருப்பையா (துறைமுகம்) ஆகியோர் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சரத்குமார் தமிழ் திரைப்பட சங்க தலைவராக  இருக்கிறார். அவர் இப்போது ஆளும் கட்சிக் கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், இனி திரையுலகிற்கு முன்பை விட அதிகமாக நன்மைகள் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் நிலவுகிறது.

0 comments:

Post a Comment