Tuesday, May 24, 2011

தேசிய விருது சிறப்புபார்வை


யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?

1 comments:

Future Thalaiva(Vijay)....next to Thalaivan (Rajinikanth)... GhilliGiri

Post a Comment