Tuesday, May 24, 2011

இயக்குனர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் ஏதோ...?


கனவுத் தொழிற்சாலையின் கட்டளைத் தளபதிகள் என்று சொல்லக் கூடியவர்கள் இயக்குனர்கள். தங்கள் படைப்புக்களை உருவாக்குவதற்காகச் சிரமங்கங்கள் பலவற்றைச் சந்திக்க வேண்டியிருப்பது என்பது உண்மையாக இருந்தாலும் கூட,  படப்பிடிப்பு என்று ஆரம்பித்துவிட்டால் இயக்குநர் உத்தரவுக்ககாகவே
எல்லோரும் காத்துக்கிடப்பார்கள் என்பதுவும் நடைமுறை உண்மை. இவ்வாறான கட்டளைத் தளபதிகளின் வீட்டுக்குள் சத்தமில்லாத யுத்தம் ஒன்று நடைபெறத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது.
பாரதிராஜா தலைவராகவும், ஆர்.கே. செல்வமணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும், தமிழ்நாடு திரைபட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து நேற்று முந்தினம், சென்னை கமலா திரையரங்கில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாரதிராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில திரு. பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி தவிர, சங்கத்தின் பொருளாளராக இருந்து திடீரென்று ராஜினாமா செய்த ஆர்.சுந்தராஜன், தற்போதைய பொருளாளர் இயக்குனர் எழில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன், உள்ளிட்ட மேலும் பல இயக்குநர்களும், 2000 உதவி இயக்குநர்களும் கலந்து கொண்டு அரங்கை நிரப்பினார்கள். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு மீடியா அனுமதிக்கப் படவில்லை(அதற்காக நாம் போகாமல் இருக்கமுடியுமா?).
கூட்டம் ஆரம்பம் ஆகி, தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி,. "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று அறிவித்தார். உடன் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.
பிராத்தனை முடிந்து சங்கத்தின் கணக்கு வழக்குகளை படிக்க சங்கத்தின் நியமிக்கப் பட்ட பொருளாளர் எழில் மைக் முன்பு வந்தார். அப்போது எழுந்து ஆவேசப்பட்டார் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். “ சங்கத்தின் கணக்கு வழக்குகளை அச்சிட்டு உறுப்பினர்களுக்கு கொடுக்காமல்… எதற்கு வரவு செலவு கணக்கு படிக்கிறீர்கள்.” என்றார்.
அதன் பிறகு சுருக்கமாக அச்சடிக்கப்பட்ட பாலண்ஸ் சீட் உறுப்பினர்களுக்கு ஜெராக்ஸ் மூலம் வழங்கப்பட்டது. சுந்தரராஜனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதும் மைக்கைப் பிடித்தார் “ எனக்கு சங்க நிர்வாகிகள் நன்றாக தண்ணீர் காட்டி விட்டார்கள். சங்கப்பணம் அநியாமாக பலநிலைகளில் விரயம் செய்யபட்டிருகிறது. இதை தட்டிக்கேட்டி கணக்குகளில் கையெழுத்துப் போடமுடியாது என்று சொன்னேன். ஆனால் என அனுமதி இல்லாமலேயே சங்கப்பணம் கையாளப்படுகிறது. அதனால்தான் ராஜினாமா செய்தேன்” என்றார்.
இதற்கு பதிலளித்த செல்வமணி சங்கக் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்ய அனுப்பப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் சங்கத்துக்கு வந்து கணக்குகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். உடன் தேர்தல் தேதியையும் அறிவித்தார். தங்கள் தலைமையிலான செயற்குழு சங்க செயல்பாட்டை கணனி மயமாகியதாகவும், சுந்தர்ராஜன் இருந்திருந்தால் டி-40 இயக்குனர் சங்க விழாவை நடத்தியிருக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்.
டி-40 விழாவை சன் டிவிக்கு விற்ற வகையில் 2.60 கோடி இயக்குனர் சங்கத்துக்கு கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தில் அந்த விழாவை நடத்தவே 1.5 கோடி செலவானதாக கணக்கு காட்டுகிறார்களாம் இயக்குனர் சங்கத்தில். ஒரு விழாவை நடத்த இவ்வளவு பணம் எப்படி செலவாகும் என்று உதவி இயக்குனர்கள் அதிர்ச்சியுடன் பேசியபடி கலைந்து சென்றனர். ஜூன் இறுதியில் நடைபெற இருக்கும் இயக்குனர் சங்கத்தேர்தலில் ஆர்.சுந்தராஜான் தலைமையில் புதிய ஆணி முளைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

0 comments:

Post a Comment