நடிகர் விஜய் நடித்த படம் ‘காவலன்’. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தடுத்த வழக்குகள் மற்றும் பரபரப்பான தீர்ப்புகளால் அந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவலன் படத்துக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அபுபக்கர் உள்பட 5 பேர் தொடர்ந்த ஒரு வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியமும், கோகுலம் சிட்பண்ட்ஸ் தொடர்ந்த மற்றொரு வழக்கை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முருகேசன் மற்றும் நாகமுத்து ஆகியோரும் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், ‘படத்தை வெளியிடலாம், ஆனால் படம் வெளியானவுடன் மனுதாரர்களுக்கு தர வேண்டிய தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக வங்கி கடன் தீர்ப்பாயத்திலும் நேற்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி ஜேக்கப் டேனியல் விசாரித்து, ‘‘யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு தர வேண்டிய 3.5 கோடியை கொடுத்தபின்னரே படத்தை திரையிட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
இதையடுத்து காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ‘காவலன்’ படத்துக்கான நாளிதழ் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த டைரக்டர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க அந்த படத்துக்கான விநியோக உரிமையை அவர் பெற்றிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவரது பெயர் தற்போது நீக்கப்பட்டிருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தியேட்டர்கள் தரப்பில் இருந்தும் விஜய்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் சிக்கல் மேலும் வலுத்து வருகிறது. இதுதவிர, ஷக்தி சிதம்பரம் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் அவரை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும் மாறி மாறி கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
0 comments:
Post a Comment