Saturday, January 29, 2011

சமூகத்துக்கு நல்ல கருத்து கொண்ட படங்களைத் தயாரிக்க திட்டம்! – விஜய்

சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன், என்றார் நடிகர் விஜய்.
சினிமாவில் இன்றைக்கு பல வகையிலும் பரபரப்பாக பேசப்படுபவராக மாறியுள்ளார் விஜய். ஒருபக்கம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு யூகங்கள் வருகின்றன. அவற்றுக்கு உரம் போடுவதுபோல, விஜய்யும் அவர் தந்தையும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ள நிலையில், விஜய் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அரசியல், ஏதிர்கால சினிமா பற்றிய தனது பார்வையை அவர் கூறி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி இது:
அரசியலில் ஈடுபடும் முடிவை நான் எடுத்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதெல்லாம் மரியாதை நிமித்தம்தான். நடிகர் என்றால் எந்த அரசியல் தலைவரையும் சந்தித்துப் பேசக்கூடாது என்று எதுவுமில்லை. அப்படி பேசினால் உடனே அந்தக் கட்சியில் சேரப்போவதாக அர்த்தமும் இல்லை.
அரசியல் எனக்கு விருப்பமான துறைதான். நான் அரசியலுக்கு வந்தால் எனது பார்வை நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கும். சர்ச்சைகள் ஊழல்களில் சிக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
இரண்டு ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்கலாம்.
சமூகத்துக்கு நல்ல கருத்துக்கள் சொல்லும் படங்களைத் தர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இத்தகைய படங்களை நானே தயாரிக்க வேண்டும் என்ற திட்டமும் உள்ளது.
என் வாழ்க்கையில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கோவையில் நடந்த குழந்தைகள் கற்பழிப்பு மற்றும் கொடூர கொலை சம்பவம்தான். எனக்கு மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்திய சம்பவம் அது. இந்த மாதிரி கொடிய சம்பவங்களில் குற்றவாளிகளை உடனே தூக்கில் போட்டுக் கொல்ல வேண்டும். இதுபோன்ற சமூக அவலங்கள் ஏற்படாத வகையில் மக்களை விழிப்புடன் இருக்க வைக்க என்னால் முடிந்த முயற்சிகளை இனி செய்யப் போகிறேன்,” என்றார் விஜய்.

0 comments:

Post a Comment