Friday, January 21, 2011

மாநாடு?? அரசியல் பிரவேசம்?? விஜய் பரபரப்பு பதில்

அரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். சென்னையில், ‘வேலாயுதம்’ படப்பிடிப்பில் இருந்த விஜய், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பல பிரச்னைகளுக்குப் பிறகு ‘காவலன்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் எனது சில படங்கள் வெளியாகும்போது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது, அதை நான் சரி செய்திருக்கிறேன். ஆனால் ‘காவலன்‘ படத்துக்கு புதிதாக பல பிரச்னைகள் உருவானது. அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்தேன். படத்துக்கு மக்கள் அளித்திருக்கும் வரவேற்பால் அந்த கவலை மறந்து சந்தோஷமாக இருக்கிறது.
நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்ற செய்தி அடிக்கடி மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் நடிகன் ஆனேன். ஆனால் இவ்வளவு பெரிய உயரத்தில் மக்கள் என்னை அமர வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை உயர்த்திப் பார்த்த மக்களுக்கு நானும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இப்போது என் கவனம் சினிமாவில்தான் இருக்கிறது. இனி ஒரு ஆக்ஷன் படம், ஒரு கதையம்சமுள்ள படம் என்று மாறி மாறி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு பிரசாரம் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவது பற்றியே முடிவு செய்யாதபோது, அந்த கேள்விக்கே இடம் இல்லை.
எனது தந்தை ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு ராகுலை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்ததைபோல ஜெயலலிதாவை சந்திக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல சந்திப்பு. அவ்வளவுதான். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அவருக்கு தேவையானபடி நான் மாற வேண்டும். இப்போதைக்கு நான் வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அது இயலாத காரியம். அதனால் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கும் வேறு காரணம் கற்பிப்பது தவறு. திருச்சியில் நடக்க உத்தேசித்திருக்கும் ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றார்.

0 comments:

Post a Comment