Saturday, January 22, 2011

சினிமா விமர்சனம் : காவலன் vikatan.com





'காவலன் காதலன் ஆனால்..?!’ -மூன்றே  வார்த்தைதான் கதை!
ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக, ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக, செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து, அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால், இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க, ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க, காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.
பில்ட் - அப் ஓப்பனிங், சூப்பர்மேன் சூரத்தனம், பஞ்ச் பராக்கிரமம், ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும், 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!
கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா, காதல், கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும், தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’, 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம், அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர, ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.
க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால், அதைத் தவிர, மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காத, அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும், போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது, கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர், பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!
இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!

0 comments:

Post a Comment