தினமலர் விமர்சனம்
சில, பல தோல்விகளுக்கு பின் விஜய் திட்டமிட்டு தந்திருக்கும் வெற்றி படம்தான் "காவலன்"!
அந்த ஏரியாவிலேயே பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாதலத்தில் அடிதடி வம்பு, வழக்கு என தாதாவாக வாழ்ந்த அவர், ஒரு நம்பிக்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்கு வரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காபந்து செய்கிறார். அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்கே காவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார். அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை!
நம்பமுடியாத கதை என்றாலும் அதை நம்பும் படியாக செய்து அசினின் காவலனாக, காதலனாக கல்லூரி தோழனாக விஜய் வடிவேலு அண்ட் கோவினருடன் பண்ணும் காமெடி கலாட்டக்கள் விஜய்யும், இயக்குநர் சித்திக்கும் ஏற்கனவே இணைந்த "ப்ரண்ட்ஸ்" படத்தை ஞாபகபடுத்தும் அளவிற்கு கலகலப்பை ஏற்படுத்துவது காவலன் படத்தின் ப்ளஸ்பாயிண்ட். கண்ணதாசனா, காளிதாசனா? பாரதியாரா, பாரதிராஜாவா...? என அடிக்கடி வடிவேலு தானும் குழம்பி, விஜய்யையும் குழப்பும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பதுதான் காவலன் படத்தின் பெரியபலம்! அதிலும் தன் காதலி யார்? என்பதை தெரியாமல் நீங்கதான் என் காதலி என்று வைத்துக் கொள்ளுங்களேன் நான் அவகிட்டே எப்படி பேசுவேன்னு.. இப்போ பேசி காட்டுகிறேன்... என்று காதலியை சந்திக்க வந்த இடத்தில் உடன் வரும் அசினின் தோள்பட்டையை பிடித்துக்கொண்டு விஜய் பேசும் காதல் மொழியை விஜய் ஒருவரால் மட்டுமே செய்து காட்ட முடியும். 38வயதில் ஏதோ 25வயது வாலிபர் மாதிரி உடலாலும் மனதாலும் காதலிக்கும் விஜய்க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே தரவேண்டும்! காதல் காட்சிகளில் மட்டுமல்ல ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய பரிமாணம் காட்டி இருக்கும் விஜய்யை இடையில் ஏற்பட்ட தோல்வி(படங்)கள் ரொம்பவே பண்படுத்தி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்! வாவ் என்ன ஒரு ரொமான்ஸ் என்ன ஒரு ஆக்ஷன், என்ன ஒரு காமெடி சென்ஸ்! கீப் இட் அப் விஜய்!
அசின், ராஜ்கிரணின் மகளாக விஜய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார் அம்மணி. அசினைக்காட்டிலும் அவர் உடன் வரும் மித்ராகுரியன் இரண்டாம் நாயகி என்பதை காட்டிலும் இன்னும் பிரமாதமாக நடித்து அசினையே சில இடங்களில் ஓவர் டேக் செய்துவிடுகிறார்.
ராஜ்கிரண் அப்பா கேரக்டரா? அப்பப்பா கேரக்டரா? என கேட்குமளவிற்கு மிரட்டலான நடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார். தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யின் அப்பா நிழல்கள் ரவி, அம்மா யுவஸ்ரீ என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அம்மாவாசை வடிவேலுவும், அவரது ஜோடி பூங்கொடி நீபாவும் செம காம்பினேஷன்! எல்லாம் சரி விஜய், அசினுடன் கல்லூரியில் படிக்கும் குள்ளநடிகருக்கு "அஞ்சாநெஞ்சன்" என பெயர் வைத்து வம்பை விலைக்கு வாங்கியது யார் விஜய்யா? சித்திக்கா?
வித்யாசாகரின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து காவலனை விஜய்யின் காதலுக்கு மரியாதை அளவு உயர்த்தி பிடித்திருக்கின்றன!
மொத்தத்தில் "காவலன்" விஜய் ரசிகர்களுக்கு "காதலன்".
0 comments:
Post a Comment