Friday, January 28, 2011

காவலன்

Movie review, Tamil movie review, review in tamil, kollywood review, bollywood review, hollywood review



நடிப்பு: விஜய், அசின், ராஜ்கிரண், வடிவேலு, ரோஜா. இயக்கம்: சித்திக்
தயாரிப்பு: ஏகவீரா கிரியேஷன்ஸ் இசை: வித்யாசாகர் ஒளிப்பதிவு: ஏகாம்பரம்

ஏரியா மக்களுக்கு காட்பாதராக இருக்கும் ராஜ்கிரண் மீது, விஜய்க்கு மரியாதை. அவரையே ரோல்மாடலாக கொண்டு அடிதடி பார்ட்டியாக வலம் வருகிறார். விஜய்யை திருத்த ராஜ்கிரணுக்கே பார்டிகார்டாக அனுப்பி வைக்கிறார்கள் பெற்றவர்கள். தனக்கு பார்டிகார்டாக வந்தவரை, தன் மகள் அசினுக்கு பார்டிகார்டாக்குகிறார் ராஜ்கிரண். அசினுக்கு காவலானாகும் விஜய், அவருக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுகிறார். அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் அசின், விஜய்க்கு போனில் காதல் ரூட் போட்டு திசை திருப்புகிறார். செல்போன் காதலி மீது உயிரையே வைக்கும் விஜய் மீது அசினுக்கு நிஜமாகவே காதல் மலர்கிறது.

காவலனாக வந்தவனே காதலனாக மாறியது ரா£ஜ்கிரணுக்கு தெரியவர, தொடை தட்டி கிளம்புகிறார். ‘தன்னை காதலிக்கவில்லை; வேறொருத்தியை காதலிக்கிறார். அவர்கள் இருவரும் வெளியூருக்கு ஓடிப்போகப் போகிறார்கள்’ என்று அசின் பொய் சொல்லி விஜய் உயிரைக் காப்பாற்றுகிறார். ரயில் நிலையத்தில் டெலிபோன் காதலிக்காக விஜய் காத்திருக்க, அவருக்கு உண்மையை சொல்ல தன் தோழி மித்ராவை அசின் அனுப்பி வைக்க, விஜய்யை தேடி காதலி யாரும் வராவிட்டால் அவரை போட்டுத்தள்ள ராஜ்கிரண் ஆள் அனுப்பி வைக்க, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பது தடதடக்கும் மீதி.
பாடிகார்ட் யூனிபார்முடன் அசினை பாடாய் படுத்துவதிலாகட்டும், செல்போன் காதலியிடம் உருகுவதிலாகட்டும், காதலியை முதன் முதலாக சந்திக்கச் செல்லும் படபடப்பிலாகட்டும், ‘எனக்காக வேண்டிக்குங்க’ என்று அசினிடமே கெஞ்சும் நெகிழ்ச்சியிலாகட்டும், விஜய் கலக்குகிறார்.

அசினின் தோற்றத்திலும் நடிப்பிலும் முதிர்ச்சி. போனில் பேசி விஜய்யை காதலில் வீழ்த்தும்போதும், பிறகு அந்த காதலில் அவரே வீழ்ந்து தவிக்கும்போதும் பிசினாக மனதில் ஒட்டுகிறார் அசின். அசின் தோழியாக எப்போதும் அவரை சுற்றி வரும் அறிமுகம் மித்ரா, ஹீரோயினுக்கான தகுதியோடு இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் எடுக்கும் முடிவும், அவரது முடிவும் நெகிழ்வு. வழக்கமான காட்பாதர் பில்டப்களோடு அறிமுகமாகும் ராஜ்கிரணுக்கு வேலை குறைவு. வடிவேலு வரும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மா கேரக்டரில் என்ட்ரி கொடுத்திருக்கும் ரோஜாவுக்கு அதிக வேலை இல்லை. எம்.எஸ்.பாஸ்கரின் தூக்க காமெடி, வடிவேலுவின் வெடிக்கு முன் காணாமல் போகிறது. காமெடி என்ற பெயரில் நீபாவை கவர்ச்சியாக காட்டி அந்த குறையை போக்கியிருக்கிறார்கள்.

மலையாள பார்டிகார்ட்டை முடிந்தவரை தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சித்திக். பொதுவாக விஜய் பட பாடல்கள் இறக்கை கட்டிப் பறக்கும். இதில் பின்னணி இசையில் காட்டிய வித்தையை, பாடலில் காட்ட தவறி விட்டார் வித்யாசாகர். ஒளிப்பதிவை கதைக்கு தேவையான அளவுக்கு கொடுத்திருக்கிறார் ஏகாம்பரம். பாடிகார்டாக வரும் விஜய், கல்லூரியில் சேர்வதிலும், சின்ன வயதில் பெயர் வைத்தார் என்பதற்காகவே விஜய், ராஜ்கிரணை ரோல்மாடலாக கொள்வதிலும், ஒரு பெண்ணின் முகத்தை பார்க்காமலேயே போன் காதலில் உருகுவதிலும் லாஜிக் மிஸ்சிங். 

0 comments:

Post a Comment