
நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்பட பிரிண்ட்களை பறிமுதல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சினிமா பாரடைஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது:
காவலன் திரைப்படத்தின் முதல் காபிரைட் உரிமையை கர்நாடக மாநிலத்தைத் தவிர மற்ற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் நான் பெறுவது தொடர்பாக ஏகவீரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சி. ரமேஷ்பாபு என்பவருடன் ரூ. 38.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் முன் பணமாக 3.1.11-ம் தேதி வரை ரூ. 17.60 கோடி அளித்துள்ளேன். இந்த நிலையில், அந்தப் படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை ரமேஷ்பாபு எனக்குத் தெரியாமல் தந்திரா இன்கார்ப்போரேட் என்ற நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
மேலும், அந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு வரை அந்தப் படம் பற்றிய அனைத்து விளம்பரங்களிலும் சக்தி சிதம்பரத்தின் காவலன் என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த வாசகம் விளம்பரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அந்தப் படத்தின் பிரிண்ட்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ரமேஷ்பாபுவின் செயல்களால் எனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதோடு திரையுலகில் எனது கெளரவத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, அந்தத் திரைப்படத்துக்கு நான்தான் முதல் காபிரைட் உரிமையாளர் என அறிவிக்க வேண்டும். நீதிமன்ற வழக்கறிஞரை (அட்வகேட் கமிஷனர்) நியமித்து அந்தப் படத்தின் அனைத்து பிரிண்ட்களையும் பறிமுதல் செய்து, அவற்றில் எனது பெயரைச் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரர் விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் கூறினார்.
0 comments:
Post a Comment