ஒரு பாராசூட்டே பலூன் ஆகியிருக்கிறது. விஜய்யின் ஆர்ப்பாட்ட சினிமாவையும் அடிதடி சினிமாவையும் பார்த்து பழகிய கண்களுக்கு இந்த 'காவலன்' நேசத்திற்குரிய ஒரு வாட்ச்மேன் தாத்தா!. உள்ளூரில் இருந்தால் உதவாக்கரை ஆகிவிடுவார் என்பதற்காக திட்டம் போட்டு விஜய்யை வெளியூருக்கு ரயிலேற்றுகிறது குடும்பம். போகிற இடத்தில் அவருக்கு பிடித்தமான பாடிகாட் வேலை. ராஜ்கிரணை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வீட்டுக்குள் நுழையும் விஜய், அப்படியே அவரது மகள் அசினுக்கு பாடிகாட் ஆகிறார். கல்லூரிக்கு படிக்கப் போகும் அவருடன் நீயும் படிக்கப் போ. ஆனால் அங்கு நீ மாணவன் இல்லை. என் மகளுக்கு காவலன் என்கிறார் திருமதி ராஜ்கிரண். (நம்ம பழைய ரோஜா). சுற்றி சுற்றி காவலுக்கு நிற்கும் விஜய்யை வேறு பக்கம் டைவர்ட் செய்ய அசின் செய்யும் தந்திரம், செல்போனிலேயே காதல் டிக்டேட்! ஒரு கட்டத்தில் விளையாட்டு வினையாகிறது. காதலில் விழுகிறார் அசின். நான்தான் உன்னுடன் போனில் பேசியவள் என்று எதிரில் வந்து நிற்பதற்கு துடியாய் துடிக்கிறார். போனில் காதலித்தவள் எவளாக இருந்தாலும் அவளை ஏற்றுக் கொள்வேன் என்கிறார் விஜய். கடைசியில் விஜய்யின் எதிரில் நின்றது அசினா? இன்னொருத்தியா? ஒரு சொட்டு கண்ணீருடன் உப்பு கரிக்கும் க்ளைமாக்ஸ். கடந்த சில வருடங்களாக தனியார் மின்சார வாரியம் போல தடதடத்து வந்த விஜய், இந்த படத்தில் நிலவொளியாக ஜொலிக்கிறார். ரசிகர்களுக்காக திணிக்கப்பட்ட சில சண்டை காட்சிகள் கூட லாஜிக்குக்குள் அடங்கிவிடுவது சந்தோஷம். எனக்காக வேண்டிக்கங்க என்று அசினிடம் ஆசி வாங்கிக் கொண்டு காதலியை பார்க்கப் போகிற விஜய் சின்ன வெட்கத்துடன் நடப்பதும், தவிப்பதும் திரும்ப திரும்ப ரசிக்க வைக்கிற அழகு. அவ்வளவு அடியையும் தாங்கிக் கொள்கிற பக்குவத்தையும் வரவேற்கலாம். விஜய்யை வெறுப்பேற்றி ரசிக்கும் அசினின் குறும்புத்தனம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த பழைய அழகுதான் போன இடம் தெரியவில்லை. திடீர் நாயகியாக மித்ரா. அதற்கேற்றார் போலவே திடீர் சாவும்! வடிவேலு-விஜய் காம்பினேஷன் மேளமும் தாளமும் மாதிரி சகல பொருத்தம். இந்த படத்திலும் விஜய்யை சமாளிக்க முடியாமல் வடிவேலு விழி பிதுங்குவதும், "ரொம்ப கன்பியூஸ் ஆயிட்டாரு" என்று பரிதாப்படுவதுமாக தியேட்டரில் எட்டாம் எண் கொடியேற்றுகிறது வைகைப்புயல்! அதே ராஜ்கிரண். அதே மேனரிசம். அதே காட்சியமைப்புகள். போர்ப்பா... ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அங்கங்கே அடக்கியும் வாசித்திருக்கிறது. வித்தியாசகரின் ஆர்மோனிய பொட்டிக்கு கொஞ்ச நாட்களாக அபஜுரம்! மாத்திரை அவசியம் தலைவரே... காவலன்- துப்பாக்கி, இரும்பு. தோட்டாவோ துரும்பு! |
0 comments:
Post a Comment