அவ்வளவு பெரிய அடையாறு ஆலமரமே திடீரென்று பொட்டிக்குள் அடங்குகிற போன்சாய் மரமாகிவிட்டால்? அதே கதிதான் இப்போது விஜய்யின் காவலனுக்கும்! கொண்டை ஊசி வளைவுகளாக ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது படம். நேற்றைய நிலவரம் ஒன்று. இன்றைய நிலவரம் வேறொன்றாக திடுக்கிடும் திருப்பங்கள் இப்படத்தின் வெளியீட்டு விஷயத்தில். நாலாபுறத்திலிருந்தும் கடனை வாங்கியிருக்கும் இப்படத்தின் 'திடீர்' தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர், இன்றைய காவலன் விளம்பத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. (அதுவும் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் காவலன் விளம்பரம் வரவேயில்லை) படத்தின் முதல் தயாரிப்பாளரான ரொமேஷ் பாபுவை 15 கோடி கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய சொல்லிவிட்டது நீதிமன்றம். இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். "இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?" என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! நாளைக்கு காவலன் வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்பதுதான் இப்போதைய நிஜ நிலவரம். பின் குறிப்பு- இதற்கிடையில் ராஜபோகமான சேனல் ஒன்றும் இப்படத்தின் சேட்டிலைட் ரைட்சுக்காக மூன்று கோடியை கொடுத்திருந்ததாம். ஆனால் இவர்கள் கைக்கு படம் போகவில்லை. மாறாக சன் டி.விக்கு விற்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் இந்த சேனல் காரர்களும் கோர்ட் படியேறலாம். |
0 comments:
Post a Comment