பொங்கலுக்கு எத்தனை படங்கள் வருகின்றன என்பதில் இப்போதும் கூட குழப்ப நிலைதான் நீடிக்கிறது. ஆனால் விஜய்யின் “காவலன்”, தனுஷ் நடித்த “ஆடுகளம்”, கலைஞரின் “இளைஞன்”, “சிறுத்தை” போன்ற படங்கள் ரிலீஸ் உறுதி என்பதால் இப்போதே முன்பதிவு தொடங்கிவிட்டது.
இந்த படங்களில் விஜய்யின் காவலனுக்கு எதிராக பலமாக லாபி செய்யப்படுகிறது மீடியாவில். இந்தப் படத்துக்கு தியேட்டரே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் சென்னை நகரில் முன்னணி காம்ப்ளக்ஸ்கள், ஒற்றைத் திரை அரங்குகள் அனைத்திலும் காவலன் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 15 திரையரங்குகளில் காவலன் வெளியாகிறது. இன்று சென்னையில் காவலனுக்கு முன்பதிவு தொடங்கும் எனத் தெரிகிறது. பொங்கல் ரிலீஸிலேயே திரையரங்குகளில் முன்பதிவுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் விசாரிப்பது காவலனைத்தான் என்கிறார்கள் அபிராமி திரையரங்க நிர்வாகிகள்.
பொங்கலுக்கு வரும் இன்னொரு முக்கிய படம் ஆடுகளம். முடிந்த வரை நல்ல திரையரங்குகளைப் பிடித்துள்ளது படத்தை வெளியிடும் சன் பிக்ஸர்ஸ். நேற்றே புக்கிங் துவங்கிவிட்டது. ஆனால் பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பில்லை என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது சன்னுக்கு.
இளைஞன் படம் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் மிக நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் மூலம் ஓரளவு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதைக்கு புக்கிங் பெரிதாக இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் உள்ளனர் தியேட்டர்காரர்கள்.
தெலுங்கு ரீமேக்கான சிறுத்தை படமும் முன்பே ரேஸில் குதித்துவிட்டது. இந்தப் படத்துக்கு இன்று முதல் புக்கிங் துவங்குகிறது. ஆனால் க்யூவில் காத்திருந்து வாங்கும் அளவுக்கு ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை. காலை 10 மணிக்கு துவங்கிய புக்கிங்கில் சில டிக்கெட்டுகள்தான் விற்றன. ஒருவேளை இனி வரும் நாட்களில் நிலை மாறலாம் என்கிறார்கள்.
இந்தப் படங்களைத் தவிர “சொல்லித் தரவா” மற்றும் “கருத்தகண்ணன் ரேக்ளா ரேஸ்” என்ற டப்பிங் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.
0 comments:
Post a Comment