Saturday, June 18, 2011

விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!


நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ஹிட் என்ற பூச்சி மருந்தை தவறாக சித்தரித்ததால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரேஜ் சாரா லீ என்ற நிறுவனம், ஹிட் என்ற பூச்சி மருந்தை தயாரிக்கிறது. இது கொசு, கரப்பான் பூச்சிகளை ஒழிப்பதற்காக தயாரிக்கப்படுவது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் டித்து பேரரசு இயக்கிய திருப்பாச்சி படம் 2005-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சில நாட்களில் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது கோத்ரேஜ் சாரா லீ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், "கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை தடுப்பதற்காக ஹிட் மருந்தை நாங்கள் தயாரிக்கிறோம். இந்த நிலையில் `திருப்பாச்சி' படத்தை பார்த்தோம். அதில் இந்த பூச்சி மருந்தைப் பற்றி 2 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் அதிர்ச்சி அளித்தன.

கர்ப்பிணியைக் கூட கொல்லும்...

ஒரு காட்சியில், 'இந்த மருந்து, கருவில் உள்ள குழந்தையைக் கூட கொல்லும்' என்று ஒரு கர்ப்பிணியிடம் ஒருவர் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு காட்சியில், வில்லனின் வாயில் ஹிட் மருந்தை அடித்து அவரை ஹீரோ கொலை செய்வதுபோல் காட்டப்படுகிறது. இப்படி இந்த மருந்தை சித்தரித்திருப்பது தவறானது.

ரூ.25 லட்சம் நஷ்டஈடு

மனித உயிர்களுக்கு இந்த மருந்தால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் `திருப்பாச்சி' படத்தில் விதாண்டாவாதமாக கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

எனவே இந்த மருந்தை பற்றி 'திருப்பாச்சி' படத்தில் வரும் காட்சிகளை தியேட்டரிலோ, சி.டி.களிலோ, டி.வி.களிலோ, கேபிள்களிலோ ஒளிபரப்பப் தடை விதிக்க வேண்டும். இந்த காட்சிகளால் மருந்து வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புக்கான நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் தர சூப்பர் குட் பிலிம்ஸ்-க்கு உத்தரவிட வேண்டும்.

இது போன்ற காட்சிகளை வேறு யாரும் பின்பற்றக்கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இடைக்கால உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பழனிவேல் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கு விசாரணையின் போது அந்த காட்சிகளுக்கு ஏற்கனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டும் அந்த காட்சியை நீக்கி படத்தை திரையிட்டனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் அந்த காட்சி நீக்கப்படாமல் திரையிடப்பட்டது.

ரூ.5 லட்சம் கொடுங்கள்

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த காட்சிகளை காட்டியது, மனுதாரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாய் அமைந்திருந்தது. எனவே மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் வழங்க வேண்டும்.

மனுதாரரின் தயாரிப்பான இந்த மருந்துக்கு, மத்திய அரசின் தரச்சான்று தரப்பட்டுள்ளது. மனித உயிருக்கு பாதுகாப்பானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் காட்சிகள், அந்த மருந்தின் புகழை கெடுப்பதுபோல் அமைந்து விட்டது.," என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment