‘காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?””எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நான், ‘மக்கள் இயக்கம்’ ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அப்போ இருந்தே எங்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுக்க மக்களுக்கு சமூக நற்பணிகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டப்போ, அதுக்கு மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருந்தோம். மீன் பிடிக்கப்போன தமிழர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்றதைக் கண்டிச்சு நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இது மாதிரி எத்தனையோ விஷயங்களை சமூக அக்கறையோட செய்திருக்கோம். எவ்வளவோ உதவிகளை, நல்ல விஷயங்களை தமிழ்நாடு முழுக்கச் செய்துட்டே தான் இருக்கோம். இதுல சுயநல அரசியல் எங்கே இருக்குங்க? மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப்போடுற மாதிரிதான், சில பேர் ‘காவலன்’ பட ரிலீஸ் பிரச்னையையும் அம்மாவை நான் ஆதரிச்சதையும் சம்பந்தப்படுத்திப் பேசுறாங்க!”
பி.கீர்த்தனா, காரைப்பட்டி.
”வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?”
” ‘இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’னு ஊர் உலகமே சொல்ற புரட்சித் தலைவரைப் பார்த்து!”
அ.யாழினி பர்வதம், சென்னை.
”அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?”
”வெற்றி முகத்தோடு இருக்காங்க. சிரிச்ச முகத்தோடு பேசினாங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும்கிற வேட்கை அந்த வேங்கையின் முகத்தில் தெரிஞ்சது!”
சு.சங்கர், போத்தனூர்.
”உங்களுக்கு பைக் ரைடிங் பிடிக்குமா? ரிலாக்ஸ்டாக இருக்கும்போது பைக்கை எடுத்துக்கொண்டு எங்கே செல்வீர்கள்?”
”ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது நான் பைக் பைத்தியம். நான் வேகமா பைக் ஓட்டுவேன்னு பயந்து, அப்பா காரில்தான் காலேஜுக்கு அனுப்புவார். இப்போகூட சிட்டிக்குள் ஷூட்டிங்னா, ஹெல்மெட் மாட்டிக் கிட்டு பைக்லயே கிளம்பிப் போயிருவேன். அப்பப்போ, ஈ.சி.ஆர். ரோட்டில் கடற்கரைக் காற்று வாங்குறதுக்காக பைக் ரைடிங் போவேன். மக்கள் மனநிலையை அறிவதற்காக, ஹெல்மெட் மாட்டிக்கொண்டு மார்க்கெட், தியேட்டர், பஸ் ஸ்டாப்களில் பைக்கில் சுற்றி வந்திருக்கேன்!”
ஜி.குப்புசாமி, விழுப்புரம்.
”வெளிநாட்டில் நீங்கள் அடிக்கடி செல்லும் இடம் எது… ஏன்?”
”லண்டன். அது ஏன் என்பது உங்களுக்கே தெரியுமே!”
கே.மணிபாலா, ஆரணி.
”முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது எது? டாக்டர் கலைஞரிடம் பிடித்தது எது?”
”முதல்வர் ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். கலைஞரிடம் பிடித்தது அவருடைய இலக்கியம்!”
ஆர்.வினோத்குமார், சென்னை.
”சினிமா, அரசியல் தவிர உங்களுக்கு ஆர்வமான வேறு துறை எது?”
”கிரிக்கெட்!”
வை.ஆ.சுரேஷ், துறையூர்.
”உங்களோடு போட்டோ எடுக்க ஆசை ஆசையா நிறையப் பேர் வருவாங்க. இவரோடு போட்டோ எடுத்துக்கவில்லையேனு நீங்க ஆசைப்பட்ட யாராச்சும் உண்டா?” ”கருணை உள்ளத்தால்… சமூக சேவையால்… உலகையே தன்வசம் ஈர்த்தவர் அன்னை தெரசா. அவங்க பக்கத்தில் நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு வாய்ப்பு கிடைக்கலை!”
கே.சுகுணா, மதுரை.
”உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் எது?”
”வள்ளலார் சொன்ன ‘விழித்திரு, தனித்திரு, பசித்திரு!”
எஸ்.சிவஞானம், செய்யாறு.
”சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதுபற்றி..?”
”நிறுத்திவைக்கப்படவில்லை. மேலும் செழுமையாக்குவதற்காகத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது!”
ச.குமார், வந்தவாசி.
”கல்லூரி படிக்கும்போது காதல் வந்திருக்கா? அதை எங்ககிட்ட சொல்ல முடியுமாங்ணா..?”
”காதல் உண்டுங்ணா. ஆனா, இப்போதைக்குச் சொல்ல முடியாதுங்ணா!”
எஸ்.நாராயணன், சென்னை.
”எவ்வளவு கடினமான நடன அசைவுகளாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அனாயாசமாக ஆடிவிடுகிறீர்களே, அதன் ரகசியம் என்ன விஜய்?”
”இதில் ரகசியம் எதுவும் இல்லை. உங்கள் வெளிப்படையான கைத்தட்டல்தான் காரணம்!”
பாரதி, சேலம்.
”நீங்கள் நெடுநாளாகச் சந்திக்க விரும்பும் நபர் யார்?” ”சேலம் பாரதி, உங்களைத் தான்!”
எம்.சங்கர், திருச்சி.
”தியேட்டரில் வந்து படம் பார்த்து இருக்கிறீர்களா? சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்?”
”அடிக்கடி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பேன். சமீபத்தில் ‘கோ’ படம் பார்த்தேன். தியேட்டருக்கு நான் வருவதும் தெரியாது… போவதும் தெரியாது!”
துரை சுப்ரமணியம், திருச்சி.
”தளபதியே, கடந்த தேர்தலில் நீங்கள் ஏன் வெளிப்படையாக அ.தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய வரவில்லை? அறிக்கைகூடத் தரவில்லையே?”
”நான் வேறு… என் மக்கள் இயக்கம் வேறு இல்லை. நான் என் மனசில் என்ன நினைச்சேனோ… அதைத்தான் என் அப்பா பிரசாரம் செய்தார். என்னோட மக்கள் இயக்கத் தொண்டர்களும் என் எண்ணத்தைப் புரிஞ்சுக் கிட்டு செயல்பட்டாங்க!”
ஆ.செந்தில்குமார், காஞ்சிபுரம்.
”ஒருவரின் பலம், பலவீனம் என்ன?”
”பலவீனத்தைப் புரிந்துகொண்டால் பலம். பலத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால் பலவீனம்!”
க.சிவாஜி மூக்கையா, தர்க்கால்.
” ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கு’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஆனா, அவங்களைச் செயல்பட விடுறது இல்லையே?”
”அது உண்மைதாங்ணா. இளைஞர்களை உற்சாகப்படுத்தச் சொல்றதோட சரி… பெரும்பாலான குடும்பங்களில் தனக்கு ஆர்வம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க இளைஞர்களுக்குப் பெற்றோர்களே தடையா இருக்காங்க. ‘இதில்தான் ஃப்யூச்சர் இருக்கு’ன்னு பெத்தவங்க தங்களோட விருப்பத்தைப் பிள்ளைங்க மேல திணிக்கிறாங்க. இதனால பிடிக்காத துறையைப் படிக்கிற இளைஞர்களால் எதிர்காலத்தில் பிரகாசிக்க முடியாமப் போயிடுது. இளைஞர்கள் தங்களோட எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கிற மாதிரி பெத்தவங்க வழிவிடணும். அப்போதுதான் ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்கிற வாசகம் நடைமுறையில் வரும். சரிங்களா?”
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
”ஒரு படத்தின் வெற்றி, தோல்விக்கு யார் காரணம்? ஹீரோவா, டைரக்டரா?”
”படத்தின் கதை, இயக்குநர் இரண்டு விஷயங்கள்தான்!”
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
”சினிமாவில் உங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?”
”சினிமாவில் நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு ஒரு பட்டியல் எழுதினா, அன்னிலேர்ந்து இன்னிக்கு வரை என்கூடவே இருக்கும் காலேஜ் நண்பர்கள்தான் பாஸ்!”
சு.சங்கர், போத்தனூர்.
”கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”
”மனைவி மட்டும் அல்ல… ரசிகர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். அவங்களை வெறுமனே சினிமாவுக்கு பேனர் கட்டும் ரசிகர்களாக இல்லாமல், மக்கள் இயக்கத் தொண்டர்களாக மாற்றி இருக்கேன். அவங்களை இன்னும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அவங்களுக்கு சமுதாயத்தில் மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கணும். நாலு பேருக்கு நல்லது செஞ்சா, நமக்கான மரியாதை தானே கிடைக்கும். அதுதான் என்னோட அடுத்த இலக்கு!”
அ.பிரபாகரன், சேலம்.
”சாதிகள் ஒழியாதா?”
”சாதியை மையமாவெச்சு அரசியல் நடத்தினவங்களுக்கு, இந்தத் தேர்தல்ல மக்கள் மரண அடி கொடுத்து இருக்காங்க. சாதி நம்மை மீண்டும் கற்காலத்துக்கு அழைச்சுட்டுப் போயிடும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுடும். மக்கள் விரும்பறது ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொன்ன பாரதியாரின் வரிகளைத்தான்!”