Tuesday, February 22, 2011

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க…! – விஜய் அறிக்கை

தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். ‘சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்’, என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.
பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம்.
கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.
அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.
உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்”, என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

0 comments:

Post a Comment