Saturday, February 19, 2011

சிங்கள ராணுவத்துக்கு எதிராக நடிகர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொல்வதையும், தற்போது 136 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.
சிங்கள ராணுவத்தினரின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிங்கள ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகிறார்கள். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்..”, என்றார்.
மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் கொல்லப்பட்ட போதே இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் விஜய். ஆனால் அது ரசிகர்களே நடத்தும் போராட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இப்போது 136 மீனவர்கள் கடத்தல் சம்பவம் காரணமாக, இந்தப் போராட்டத்தை தானே தலைமை ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment