"தமிழக மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து தனித்து நின்று போராடுவேன்," எ
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் பேசுகையில், "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
இது, சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள்.
நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. 'நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட'. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.
தந்திகள் அனுப்புவீர்...
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல்வருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை முதல் நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. இனி தமிழக மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன்," என்றார் நடிகர் விஜய்.
போலீஸ் தடியடி...
முன்னதாக, பொதுக் கூட்டத்தில் ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறியதால், போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். மாலை 5.45 மணியளவில் நடிகர் விஜய் மேடையில் ஏறினார். அவரைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பலர் மேடையை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
அப்போது, ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறி இருக்கைகளையும், தடுப்புக் கட்டைகளையும் உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி வந்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி..
இறுதியில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கும், மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டி ஆகியோரின் மறைவுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இக்கூட்டத்துக்கு நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். புதுவை மாநில விஜய் நற்பணி மன்ற தலைவரும், எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி.ஆனந்த், அகில இந்திய விஜய் தலைமை நற்பணி மன்றத்தை சேர்ந்த ஜெயசீலன், ரவிராஜா, ராஜேந்திரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
0 comments:
Post a Comment