Friday, July 1, 2011

விறு விறு வேகத்தில் 'பகலவன்'!

 
விஜய் நடித்த ‘வேலாயுதம்' ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அடுத்தபடியாக விஜய் யார் படத்தில் நடிக்கப்போகிறார் என கோடம்பாக்கம் முழுக்க பரபர பட்டிமன்றமே நடக்கிறது. மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பேசப்பட்ட விஜய், பட்ஜெட், கால்ஷூட் என தொடர் குளறுபடி நிகழ்வதால் அதிலிருந்து கழன்றுவிட்டார். அடுத்தபடியாய் சீமான், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரில் யாருடைய படத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்கிற பரபரப்பு கிளம்பியது. 

‘‘மூன்று பேர்களிடமும் கதை கேட்கப்பட்டது உண்மைதான். ஆனாலும் இப்போது உடனடியாக விஜய் நடிக்கப்போவது சீமானின் இயக்கத்தில்தான்!" என அடித்துச் சொல்கிறது விஜய் வட்டாரம்.

இதுகுறித்து சீமானிடம் பேசினோம். 

‘‘பகலவன் படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. சமூகம் சார்ந்த பங்களிப்பாக இந்தப் படம் விஜய்க்கு இருக்கும். முழுக் கதையையும் ரசித்துக் கேட்ட விஜய் சின்னச் சின்ன திருத்தங்களைச் சொன்னார். அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த அந்த மாற்றங்களையும் அதிரடியாகச் செய்திருக்கிறோம். ஊழல், லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, மோசடித்தனங்கள், ஏழைகள் மீது பாராமுகம் என படத்தில் தீவிரமான அரசியலைக் கையில் எடுத்திருக்கிறோம். கதைக்குத் தக்கபடி பொறி பறக்கும் வசனங்களும் தயார். விஜய்யின் வார்த்தைகளில் இருந்து அவை வெளிப்படும்போது திரையில் மட்டும் அல்ல... ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் சமூகம் சார்ந்த அக்கறை தீயாகப் பிறக்கும்! " என்கிறார் சீமான்.
படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப். முதலில் மருத்துவராக வரும் விஜய் அதன் பிறகு அதிரடியான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடக்கிறது. பாலிவுட் ஹீரோயின்களை இறக்குமதி செய்யலாம் என்பது விஜய்யின் யோசனை. படத்தில் கதாநாயகிக்கு வெயிட்டான கிராமத்துப் பாத்திரமாம். அதனால், பாலிவுட் நாயகிகளால் அதை சரிவர  செய்ய முடியுமா என்பது சந்தேகம். பாவனா அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தக்கூடியவர் என்கிற ஆலோசனையும் நடக்கிறது. 

0 comments:

Post a Comment