Thursday, March 31, 2011

அதிமுகவுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு!!

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து, உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர் ரசிகர்கள்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார்.
நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்கு விஜய் ரசிகர்கள் திமுக – அதிமுக என இரு பிரிவாக நின்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால், இயக்கத்தையே கலைத்துவிட்டனர் ரசிகர்கள்.
சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள்.
மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, “விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம்,” என்றனர்.
மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும் விஜய் முடிவுக்கு, ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒன்றும் நடக்கவில்லை என சந்திரசேகர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment