Thursday, March 31, 2011

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு! எஸ்.ஏ.சி. மறுப்பு!!

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சேலத்தில் கலைக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை; உறுப்பிர்கள் யாரும் உறுப்பினர் கார்டை எரிக்கவில்லை என்று நடிகர் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக திரையுலகில் நடிகர் விஜய் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக காவலன் பட ரீலிஸின்போது ரொம்பவே மனம் நொந்து போகும் அளவுக்கு பல பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தன. இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் ஆளும்கட்சிதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் அளவுக்கு போனது நிலைமை.
இதனால் இந்த தேர்தலில் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார். அதோடு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருப்பதாகவும் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதவு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் சேலத்தில் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள். மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டதற்கு, அப்படி எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று மறுத்தார். அவர் கூறுகையில், இது தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. எல்லா மாவட்ட தலைவர்களிடமும் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுதான். சேலத்தில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. விஜய் ரசிகர்கள் எங்கள் முடிவை எதிர்க்கவில்லை; ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், என்றார்.

0 comments:

Post a Comment