Tuesday, March 15, 2011

''எம்.ஜி.ஆர். போல் வருவார் விஜய்!'' : சத்யராஜ் பேட்டி

''ஒரு காலத்துல சினிமா நட்சத்திரங்கள் டி.வி-க்கு வந்தா, 'சினிமாவுல சான்ஸ் இல்லாம டி.வி-க்கு வந்துட்டாங்க’னு சிரிப்பாங்க. ஆனா, இப்போ கதையே வேற... 'டபாங்’னு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்துட்டு, டி.வி-யில் கேம் ஷோ பண்றார் சல்மான் கான். கௌதம் மேனன்கூட டி.வி சீரியல் பண்ணப் போறார்னு விகடன்லதான் படிச்சேன். டி.வி-யும் பார்ட் ஆஃப் தி ஆர்ட்தானுங்களே!'' - பேட்டிக்கான ஓப்பனிங் பில்ட்-அப் தட்டுகிறார் சத்யராஜ். விஜய் டி.வி-யின் 'ஹோம் ஸ்வீட் ஹோம்’ கேம் ஷோவுக்கு சத்யராஜ்தான் கலாட்டா கலகல காம்பியர்!


''உங்கள் சின்னத்திரை பிரவேசத்துக்கு வாழ்த்துக்கள். அப்போ, இனிமே சினிமாவில் உங்க லொள்ளு ஜொள்ளுகளைப் பார்க்க முடியாதா?''''
''இந்தியன் சினிமாவில் டூயட் முக்கியம். குறிப்பிட்ட வயசுக்கு மேல ஒரு ஹீரோ டூயட் ஆடிட்டே இருந்தா, சகிச்சுக்க முடியுமே தவிர, பார்க்க நல்லாவே இருக்காது. இப்ப எனக்கு 57 வயசு. சினிமாவில் எனக்கு அமிதாப்தான் ரோல் மாடல். டி.வி-யிலும் அவரையே ரோல் மாடலா வெச்சுக்கலாமேன்னு முடிவுஎடுத்துதான் இந்த டி.வி வாய்ப்பை ஏத்துக்கிட்டேன்!''
''உங்கள் மகன் சிபிராஜால் சினிமாவில் இன்னும் ஒரு பளிச் அடையாளம் பிடிக்க முடியலையே?''
''இந்த மாசம் மட்டும் சிபி மூணு படங்களை மறுத்திருக்கான். இதே சூழ்நிலையில் நான் இருந்திருந்தா, வர்ற வண்டியில ஏறி எங்கேயாவது போய்ச் சேருவோம்னு நினைப்பேன். ஆனா, இன்னிக்கு இளைஞர்களுக்கு அந்த அவசரம் இல்லை. இப்ப கார்த்திக்கு அடுத்தடுத்து படங்கள் ஹிட். இதே அந்தக் காலத்துல இப்படி ஹிட்டுகள் கொடுத்திருந்தா, இந் நேரம் 50 படங்களில் நடிப்பதா அறிவிப்புகள் வந்திருக்கும். ஆனா, கார்த்தி எவ்வளவு நிதானமா இருக்கார் பாருங்க. நானும் சிபியும் சேர்ந்து நடிக்க நிறைய காம்பினேஷன்கள் வந்துச்சு. ஆனா, மறுத்துட்டோம். நான் படிக்கிற காலத்திலேயே ஜஸ்ட் பாஸ் ஆனாப் போதும்னு நினைக்கிற ஆள். ஆனா, சிபி மெரிட்ல வரணும்னு நினைக்கிறான். கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனா, கண்டிப்பா ஜெயிப்பான்!''
''விஜய்யும் நிச்சயம் அரசியல் என்ட்ரி கொடுப்பார். பாஸ் ஆவாரா?''
''பொதுவா, தங்கள் துறையில் வெற்றியை ருசிச்சவங்களுக்கு அடுத்து என்னங்கிற வேகம், உத்வேகம் அதிகமா இருக்கும். அந்த ஸ்பிரிட் விஜய்யிடம் நிறையவே இருக்கு. அவரோட சினிமா என்ட்ரி சுலபமா இருந்திருக்கலாம். ஆனா, தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்க 20 வருஷம் போராடியிருக்கார். அந்தப் போராடும் குணம் விஜய்யை எந்தத் துறையிலும் ஜெயிக்கவைக்கும். ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பத்தி பேரறிஞர் அண்ணா இப்படிச் சொன்னார், 'தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிறார். சினிமா தொழிலுக்கு வராமல் வேறு எந்தத் தொழிலுக்குச் சென்றுஇருந்தாலும், அங்கும் அவர் முதல் இடத்தில்தான் இருந்திருப்பார்.’ 10 வருஷம் கழிச்சுப் பாருங்க... அதே போலத்தான் விஜய்யும்!''
''இலங்கைக்குள் திருமாவளவனை அனுமதிக்க மறுத்ததற்குக் கண்டனம் தெரிவித்தீர்கள். ஆனால், 'திருமாவளவன் ஈழ விவகாரத்தைத் தன் அரசியல் எதிர் காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்’ என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?''
''அரசியல் கட்சிகள் தேர்தலை மனதில் வெச்சு சில காரியங்கள் பண்ணுவதைத் தவிர்க்க முடியாது. இப்போ நானே மனசில் நினைக்கிற அளவுக்கு, வெளியே ஓங்கிக் குரல் கொடுக்க மாட்டேன். ஏதாவது அதிகமாப் பேசி 'சத்யராஜ் சட்டத்துக்குப் புறம்பாப் பேசிட்டான்’னு சீமான் மாதிரி நாலஞ்சு மாசம் என்னை உள்ளே பிடிச்சுப் போட்டுட்டாங்கன்னா, என்னை நம்பிப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யார் பதில் சொல்றது? இது மாதிரியான காரணங்களை மனசுல வெச்சுக்கிட்டுதான் எந்த ஒரு மனிதனும் போராட வேண்டி இருக்கு. இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தபோது இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. அதுல வெறும் 35 ஆயிரம் பேர்தான் ஜெயிலுக்குப் போனாங்கன்னு சொல்றாங்க. காலங்காத்தால பால் வாங்கணும், மளிகை சாமான் வாங்கணும், கடனுக்கு வட்டி கட்டணும், குழந்தையை ஸ்கூல்ல விடணும்னு அவனவனுக்கு தினப்படியே போராட்டம். அதை எல்லாம் தாண்டித்தான் போராட வேண்டியிருக்கு. அந்த வகை யில் திருமாவளவன் தன்னால் முடிந்ததைச் செய்கிறார்... அவ்வளவுதான்!''
''பார்வதியம்மாள் மரணத்துக்கு ஒரு கௌரவமான அஞ்சலிக் கூட்டம்கூட நடத்த முடியலையே இங்கே?''
''என் தமிழ்க் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம் இது. உலகத் தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இறுதிக் கட்டப் போரின்போதும், மகனையும் தம் மக்களையும் விட்டுச் செல்ல மாட்டோம் என்ற வைராக்கியத்தோடு களத்தில் நின்ற அந்த வீரத் தாய்க்கு என் வணக்கங்கள். 80 வயதைக் கடந்த அந்தத் தாய்க்கு தமிழகத்தி லும் ஈழத்திலும் நேர்ந்த கொடுமைகள் மறக்க முடியாதவை. தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்த அவரைத் திருப்பி அனுப்பியது, மத்திய, மாநில அரசுகள் செய்த மாபெரும் தவறு, துரோகம்!
நானும் மணிவண்ணனும் தமிழ் உணர்வுள்ள திரைக் கலைஞர்களை இணைத்து, அந்தத் தாய்க்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழ் உணர்வாளர்களை அழைக்கிறேன்!''

0 comments:

Post a Comment