வரும் தேர்தலில் விஜய் யாருக்கும் ஆதரவாக நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார். ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களுக்குத் தெரியும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காவலன் படத்துக்கு எழுந்த பிரச்சினைதான் விஜய்யை ஆளும்கட்சிக்கு எதிராக திருப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கியுள்ள சட்டப்படி குற்றம் படத்துக்கும் பிரச்சினை எழுந்துள்ளது.
படத்தை யாரும் வாங்கக் கூடாது என ஆளும் கட்சித் தரப்பில் தடுப்பதாகக் கூறப்படுகிறது. எனவே படத்தை சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளார் சந்திரசேகரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் படத்தை எதற்காக தடுக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது வெடிக்கும் புரட்சிதான் இந்தப் படம். இது யாருக்கும் எதிரான படம் என்பதை விட, சமூகத்துக்கு தேவையான படம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
படத்தைப் பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால், தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன் நான். அதனால் பணத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை.
தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படமா?
இந்தப் படத்தை தேர்தலுக்காக எடுக்கவில்லை. தேர்தல் ஏப்ரல் மாதத்தில் வரும் என்று போன மாதம் வரை யாருக்குமே தெரியாது. தேர்தல் அறிவிக்கும் முன்பே நான் ரிலீஸ் தேதி வைத்துவிட்டேன். தயாரிப்பாளர் விரும்பும் நேரத்தில்தான் ஒரு படம் திரைக்கு வர வேண்டும். நீதிக்கு தண்டனை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் ரிலீஸ் ஆனது. `நான் சிகப்பு மனித`னும் அப்படிதான். நீதிக்கு தண்டனை எடுத்தபோது நான் தி.மு.க. உறுப்பினர் இல்லை. சட்டப்படி குற்றம் எடுக்கும்போது நான் அதிமுக உறுப்பினர் அல்ல.
விஜய் ஆதரவு யாருக்கு?
விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்பதுதான் அவர் ஆதங்கமும் கோபமும்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார். ஆனால் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கே தெரியும்," என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment