Saturday, January 14, 2012

நண்பன் படத்திற்கு எதிர்ப்பு : தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்


“நண்பன்” படத்தில் ஐ.ஜே.கே., கட்சி தலைவர் பச்சமுத்துவை பற்றி இழிவான வசனம் இடம்பெற்றதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சியினர், தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது. சேலம் நகரில், 11 தியேட்டர்களில், “நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குவிந்தனர். “எங்கள் தலைவர் பற்றிய இழிவான வசனத்தை நீக்க வேண்டும் எனக்கூறி தியேட்டர் முன் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில், கட்சியினர் சிலர், ஆத்திரத்தில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி வெளியே இழுத்து வந்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் போலீஸார், தியேட்டர் முன் குவிக்கப்பட்டனர். பதட்டம் அதிகரித்ததையடுத்து, “தியேட்டரில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என, தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை தொடர்ந்து ‌போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.

0 comments:

Post a Comment