ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததிலிருந்தே அதிகாரம் படைத்தவர்களின் பலமுனை நெருக்கடிக்கு ஆளானார் விஜய். அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார் விஜய். அதனால் நெருக்கடிகள் தொடர்ந்தது. அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சிதான் விஜய்யின் “காவலன்” வெளிவர முடியாத அளவிற்கு…. தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்.
இனி பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டவுடன்தான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜெவுடனான சந்திப்பிற்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கு கொடுத்து வந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து “காவலன்” படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.
பொங்கலுக்குப் பிறகு… திருச்சியில் “விஜய் மக்கள் இயக்க மாநாடு” நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார் விஜய். அந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன மாதிரியான நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம்? தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொள்வது? என்பது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவெ ஈரோட்டில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போலீஸார் தகுந்த பாதுகாப்பு தராததால் அதைவிட பிரமாண்டமாக அதே ஈரோட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்கிற கருத்தும் விஜய் வட்டாரங்களில் நிலவிவருகிறது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல… வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கும் விஜய் வெகு விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கவிருக்கிறார்.
ஜெயலலிதா விரும்பும் பட்சத்தில்… விஜயகாந்த்திடமும் பேசி அவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் தயாராக இருக்கிறார். இப்படி நேரடியாக தி.மு.க.விற்கு எதிராக விஜய் களமிறங்கியதோடு சினிமா மூலமும் தன் எதிர்ப்பை காட்டவிருக்கிறார்.
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் “பகலவன்”. இந்தப் படத்தில் தி.மு.க. விற்கு எதிரான விஷயங்களை பஞ்ச் டயலாக்காக பேசவிருக் கிறார். சீமானும் காங்கிரஸுக்கு எதிரான முழக்கங்களை படத்தில் சேர்க்கிறார். ஆக அனல் அடிக்கும் கதை, தங்களின் கோபத்தை காட்டும் கதை என்பதால் படத்திற்கு “கோபம்” என பெயர் சூட்டலாமா? எனவும் ஆலோசித்து வருகிறார் சீமான். காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் இயக்கம் காங்கிரஸை தோற் கடிக்க கடுமையாக பிரச்சாரம் நடத்தும் என சீமான் அறிவித்திருப்ப தால், அ.தி.மு.க. பிரமுகர்கள் குஷியாக சீமானிடம் பேசிவருகிறார்கள். “அண்ணே… உங்களுக்கு ஆதரவா எதையும் செய்வோம்” எனச் சொல்லி வருகிறார்கள்.
இப்படி சினிமாக்காரர்களின் அரசியல் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்… “என்னை அரசியலுக்கு வா என தொல்லை கொடுத்தால் ரசிகர்மன்றத்தையே கலைத்து விடுவேன்” என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் அஜீத். இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக அஜீத் இருந்தாலும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கப்போவதால் “நம்ம தலயும் அரசியலில் இறங்கணும்” என அஜீத்தை நச்சரிக்கிறார்கள். அஜீத் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் கூடி ‘அரசியலுக்கு வரணும்’ என ஆர்ப்பாட்டம், கோஷம் என அமளி பண்ணுவதோடு ரகசிய ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூப்பிட்டு அஜீத் கடிந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினரில் ஒருபிரிவினர் பல்லாவரத்தில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் அரசியலுக்கு அஜீத் வரணும் என தீர்மானம் நிறைவேற்றத் தயாரானார்கள். இது அஜீத்தை டென்ஷனாக்கிவிட்டது. “எனது கொள்கைக்கு மாறாக எனது ரசிகர் மன்றத்தினர் செயல்பட ஆரம்பித்தால் உடனடியாக அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன்” என அறிக்கைவிட்டு எச்சரித்தார் அஜீத். இதையடுத்து அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘உங்கள் எண்ணப்படி செயல்படுவோம். மன்றங்களை கலைக்காதீர்கள்’ என அஜீத்திற்கு உறுதியளித்திருக்கிறார்கள்.
“மன நிம்மதியை அரசியல் கெடுக்குமானால் அப்படிப்பட்ட அரசியல் எதுக்கு உங்களுக்கு?” என விஜய்க்கு ஆலோசனை சொன்ன அஜீத் அரசியலில் எப்படி ஈடுபடுவார்? என்கிறார்கள் தலைமை மன்ற பிரமுகர்கள்.
0 comments:
Post a Comment