கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதில் விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தீர்மானிக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே, கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உதாரணங்கள்: 'சிவாஜி', 'ஏகன்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'கோவா', 'எந்திரன்' போன்ற திரைப்படங்களாகும்.
ஆனால், இந்தத் துறையில் அறிமுகமாகி, படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குநராகவும், கதை - உரையாடல் எழுதுபவராகவும் வளரத் தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள்; கேளிக்கை வரிவிலக்குக்கான அரசின் நிபந்தனைகளைப் புரிந்து கொள்ளாமலும், அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்படத் தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களைச் சூட்டுவதும்; அவற்றுக்குக் கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரச்சாரம் செய்வதும்; அதனடிப்படையில், இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினருக்கு, இந்த வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை அரசியல் நோக்குடன் வெளியிட்டு வருவதும் இப்பொழுது வழக்கமாக ஆகத் தொடங்கியுள்ளது.
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறதா அல்லது திரைப்படங்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்கான பெயர்கள் கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்கு முன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.
அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்கு முன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.
அந்தக் குழு ஒப்புக் கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதையும், அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை துறைதான் வழங்கும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment